Loading...
Paul Dhinakaran

உயரே பறந்திடுங்கள்!

Dr. Paul Dhinakaran
16 Jul

தேவனிடமிருந்து கனவுகளையும் வாக்குறுதிகளையும் பெற்ற யோசேப்பு என்ற வாலிபனைக்குறித்து  நாம் வேதத்தில் வாசிக்கிறோம். “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (யோசுவா 1:9) என்று தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர் நித்திய வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். ஆனாலும், யோசேப்பு தன் சகோதரர்களால், குழிக்குள் எறியப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டபோது, தேவனுடைய வாக்குத்தத்தம் அவன்  வாழ்வில் நிறைவேறாதது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது அல்லவா?

யோசேப்பு தன் சகோதரர்களிடம் கெஞ்சியபோது தேவன் எங்கே இருந்தார்? அடிமையாக விற்கப்பட்டபோது தேவன் எங்கே இருந்தார்? ராஜாவால் பொய்யான குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோது தேவன் எங்கே இருந்தார்?  ஜனங்களால் அவர் மறக்கப்பட்டபோது தேவன் எங்கே இருந்தார் என்று கேள்வி எழுகிறதல்லவா? பிரியமானவர்களே, “இவை எல்லாவற்றின் மத்தியிலும் தேவன் யோசேப்புடன் தான் இருந்தார் என்பதை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள்”  “கர்த்தரோ, யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்கு கிடைக்கும்படி செய்தார்” (ஆதியாகமம் 39:21). சில நேரங்களில் ஜனங்கள் உங்களை வெறுத்து தள்ளும்போது, அக்கறையுள்ள தேவகரம் எப்பொழுதும் உங்களோடிருக்கும். வார்த்தையில் உண்மையுள்ள தேவன், எகிப்தில் வரவிருக்கும் பஞ்சத்திற்கு யோசேப்பின் மூலம் தீர்வை உண்டுபண்ணும்படி, தேவன் யோசேப்பை முன்கூட்டியே தெரிந்துகொண்டார். எந்த இடத்தில் அவன் கைதியாக கொண்டுவரப்பட்டானோ, அதே இடத்தில் தேவன் அவனை பிரதம மந்திரியாக உயர்த்தினார். 

பிரியமானவர்களே, தேவன் தமது மகிமையை வெளிப்படுத்துவதற்கு உலகில் பலவீனமானவர்களையும், தாழ்மையுள்ளவர்களையும் தெரிந்துகொண்டார். ஒருவேளை நீங்களும் உங்கள் குடும்பத்திலுள்ளவர்களால், நண்பர்களால் நிராகரிக்கப்பட்டு தனிமையிலிருக்கிறீர்களா? படிப்பிலோ அல்லது வேலையிலோ சிறந்து விளங்க முடியாமல் ஒவ்வொரு நாளும் வெட்கப்படுகிறீர்களா? பாவப்பழக்கங்கள், அடிமைத்தனங்கள் என்ற கயிறு உங்கள் கழுத்தை நெறித்துக்கொண்டிருக்கிறதா? மனச்சோர்வினால் நிரம்பியிருக்கிறீர்களா? “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும்,....உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத்திராகமம் 9:16) என்று சர்வ வல்லமையுள்ள தேவன் கூறியிருக்கிறார். தேவன் தமது நாம மகிமைக்காக உங்களை உயர்ந்த ஸ்தானத்திற்கு கொண்டுச் செல்லும்படி கொஞ்ச காலம் இவைகளை அனுமதிக்கிறார். நீங்கள் மற்றவருக்கு முன்பாக உயர்ந்து காணப்படும்போது, உங்கள் காயங்கள், கவலைகள் அனைத்தையும் மறைந்துவிடும். ஆகவே உற்சாகமாயிருங்கள்!
Prayer:
அன்பின் தேவனே, 

நீங்கள் எனக்காக கொடுத்த வாக்குத்தத்ததிற்காய் உமக்கு நன்றி. நீர் வார்த்தையில் உண்மையுள்ளவர். உம்மிலும் உமது வார்த்தையிலும் நான் கவனம் செலுத்த உதவிச்செய்தருளும். ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தையின் மூலமாக நீர் என்னை கனம்பண்ணுவீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.  உமது சமூகத்தில் காத்திருக்கிறேன். உமது வல்லமையையும், பலத்தையும் எனக்குத் தந்தருளும். நீர் யாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர் என்பதை நான் அறிவேன். உமது வார்த்தையின்படியே ஏற்ற நேரத்தில் உமது நாம மகிமைக்காக என்னை உயர்த்தியருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000