Loading...

உங்களை ஆதரிக்கும் ஆண்டவர்!

Sharon Dhinakaran
15 Feb
நாம் சில நேரங்களில், நம்முடைய சுயஞானத்தின் மீது சாய்ந்துகொள்கிறோம். சிலநேரம் மற்றவர்களுடைய ஆலோசனைகள் பெரிதாய் பேசப்படுவதால் அவற்றை பின்பற்றுகிறோம். அவை தவறாகப்போகும் பட்சத்தில் தேவையில்லாத மன அழுத்தம், தோல்வி, பயம் இவற்றில் சிக்கி மனம் சோர்ந்து போகிறோம். உங்கள் பிரச்சினைக்கான தீர்வில் நீங்கள் அக்கறை கொள்ளும்போது, உங்கள் வாழ்க்கை தேவனை விட்டு விலகி கவலைக்கடலில் மூழ்கிவிடும். அனைத்தையும் நீங்களே கையாள முயற்சிக்கும்போது உங்கள் இருதயம் தளர்ந்துபோகும். எனவே, மனஅழுத்தத்தினால் தவிப்பதற்கும்,  கவலைப்படுவதற்கும் பதிலாக, உங்கள் பிரச்சினைகளை தேவன் சரியாக்குவார் என்று நம்பி, அவருடைய கரங்களில் உங்களை முழுமையாக அர்ப்பணித்துவிடுங்கள். அப்பொழுது உங்கள் காரியம் வாய்க்கும்படி அவர் தமது தயவை அனுப்புவார். அவரே எல்லாவற்றையும் வாய்க்கச்செய்கிறவர். உங்கள் கவலைகளுக்கு இந்த வேதவார்த்தையின் மூலமாக தேவன் பதிலளிக்கிறார். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங்கீதம் 55:22).

ஒரு உளவியலாளர், ஒரு பார்வையாளருக்கு மன அழுத்தத்தை இவ்வாறாக விளக்கினார்: ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு கையினால் உயர்த்தி, “இந்த கண்ணாடி டம்ளரின் தண்ணீர் எவ்வளவு கனமானது?” என்று சரியாக சொல்லுங்கள் என்றார். இதன் எடை, 8 முதல் 20 அவுன்ஸ் வரை இருக்கலாம் என்று பார்வையாளர் பதிலளித்தார். அதற்கு உளவியலாளர், “இந்த கண்ணாடியின் முழுமையான எடை முக்கியமல்ல; அதற்கு பதிலாக, “இந்த கண்ணாடியில் வைத்திருக்கும் பொருளின் கனத்தை நான் எவ்வளவு நேரம் பிடித்திருக்கிறேன் என்பதை பொறுத்தது” என பதிலளித்தார். ஆம், நான் அதை ஒரு நிமிடம் பிடித்திருந்தால், எவ்வித பிரச்சினையுமில்லை. நான் அதை ஒரு மணி நேரம் பிடித்திருந்தால், என் கை உணர்ச்சியற்று முடங்கிவிடும். இதை உற்று கவனித்தால், கண்ணாடியின் எடை எப்போதுமே மாறாது. ஆனால் அதை நான் நீண்ட நேரம் என் கரங்களில் தூக்கி பிடித்திருப்பதால், அதன் கனம் அதிகமாகிறது. “வாழ்க்கையில் மன அழுத்தங்களும் கவலைகளும் இந்த கண்ணாடி டம்ளரில் உள்ள தண்ணீர் போன்றவை தான். நீங்கள் அவைகளை சிறிது நேரம் நினைக்கும்போது எதுவும் தெரியாது. ஆனால் அவைகளை அதிக நேரம் சிந்திக்கும்போது அவை வலிக்கத் தொடங்குகிறது. நீங்கள் நாள் முழுவதும் கவலைப்பட்டு கொண்டிருப்பீர்களாகில் நீங்கள் முடங்கிப் போவீர்கள். 
பிரியமானவர்களே, கவலைகள் உங்கள் கழுத்தை நெரிக்காமல் பார்த்துகொள்வது மிக முக்கியமான ஒன்று. உங்கள் மனஅழுத்தங்களை விட்டுவிடுங்கள். உங்களால் முடிந்தவரை, ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:28-29) என்று ஆண்டவர் கூறுகிறார். வரவிருக்கும் தேர்வுகளை குறித்து கவலைப்படுகிறீர்களா? பொருளாதார பிரச்சினை உங்களை திணறச்செய்கிறதா? உடல்நலப் குறைவால் பெலவீனமாயிருக்கிறீர்களா? வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரை பற்றிக்கொள்ளுங்கள். அவரால் எல்லாம் கூடும். அவர் வனாந்தரத்தில் உங்களுக்கான வழிகளை உருவாக்குவார். எந்த தருணமாயிருந்தாலும் ஆண்டவரை உங்கள் இருதயத்தில் வைத்திருப்பதால் நீங்கள் பயமின்றி வாழ முடியும். அவர் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார், உங்களை விட்டு விலகவுமாட்டார். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

உம் சமூகம் எப்பொழுதும் எனக்கு முன்பாக செல்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் பிரச்சினைகள் அனைத்தும் உமக்குத் தெரியும். இப்போதும்கூட என் மனதிலுள்ள கவலைகளையும், பிரச்சினைகளையும் உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். இந்த மன அழுத்தத்திலிருந்து  நீர் என்னை விடுவித்து, நான் எப்போதும் சமாதானத்துடன் வாழ வழிசெய்தருளும். நீரே ஞானத்தின் ஆதாரம். என் பிரச்சினைகளுக்கு உமது ஞானத்தின் மூலம் ஒரு தீர்வை உருவாக்கியருளும். ஒவ்வொரு நாளும் அமைதியான நித்திரையை தந்து என்னை ஆசீர்வதித்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000