Loading...
DGS Dhinakaran

செல்வம் நிறைந்த பாக்கிய வாழ்வு!

Bro. D.G.S Dhinakaran
14 Mar
“உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81:16 ​
அன்புக்குரியவர்களே,
யோபு தன்னுடைய செல்வ செழிப்பின் பூரணத்தில் இருந்தான். அந்நாட்களில் பூமியில் வாழ்ந்த மனிதர்களிலெல்லாம் எல்லாம் யோபு செல்வந்தனாக விளங்கினான் (யோபு 1:3). அவனுக்கு உதவி செய்ய ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தனர். “என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன். கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்த செல்வ நாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்” (யோபு 29:6) என்று யோபு தன் குறைவின் நாட்களில் கூறுகிறான். வாழ்வு காலத்தில் நன்மையை அனுபவத்திருக்க வேண்டும் (பிரசங்கி 7:14) என்று வேதம் கூறுகிறபடி, ஆண்டவர் யோபுவை ஆசீர்வதித்தார். அவனுக்கு துக்கமென்பதே இல்லாதிருந்தது. யோபுவின் நாட்களின் ஒரு மனிதன் செல்வந்தனாக இருந்தால், தேனும் நெய்யும் அவன் வீட்டில் திரளாக இருக்க வேண்டும். யோபுவின் வீட்டில் அவை ஆறுபோல பாய்ந்து செல்லும் அளவிற்கு அதிகமாக இருந்தன (யோபு 29:6). இதுபோன்ற பரிபூரணமான செழிப்பை யோபு அனுபவித்தான்.
 
மறுபுறம், உனக்கு “சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரை சேவியாமற்போனாய்” (உபாகமம் 28:47) என்றும் வேதம் கூறுகிறது. நாம் குடும்பமாக அவரை சேவிக்க வேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார். இதையும் யோபு செய்தான். அவன் ஆண்டவருக்கு முன்பதாக சந்தோஷமான இருதயத்தோடும், மகிழ்ச்சியோடும் நடந்துகொண்டான். “உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்தவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன்” என்று தேவனே அவனைக் குறித்து சாட்சி கூறியிருக்கிறார் (யோபு 1:8)
சிலர் தங்களை மட்டும் கவனித்துக்கொள்வார்கள். குடும்பத்தையோ மறந்துபோவார்கள். ஆனால் யோபுவோ தன் பிள்ளைகள் சன்மார்க்கமான வாழ்க்கை வாழ்கிறார்களா? என்று அக்கறையோடு கவனித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தும்படியாக ஆண்டவருக்கு பலியும் செலுத்தி வந்தான். தனக்கிருந்த எல்லா பரிபூரணத்தின் மத்தியிலும் மனமகிழ்ச்சியான உள்ளத்தோடு, குடும்பமாக அவன் தேவனை சேவித்து, ‘சர்வவல்லவர் என்னோடிருந்தார்’ (யோபு 29:5) என்று கூறினான். அதுதான், அவன் பரிபூரணமான செல்வத்தை பெற்றிருந்ததின் இரகசியம்.
 
இஸ்ரவேலுக்காக யுத்தம் செய்ய ஆண்டவர் யோசுவாவை அழைத்தபோது, ஆண்டவர் யோசுவாவிடம் ‘நான் உன்னோடிருப்பேன்’ (யோசுவா 1:5) என்று கூறினார். கிதியோனிடமும், ‘நான் உன்னோடிருப்பேன்’ (நியாயாதிபதிகள் 6:16) என்று கூறினார்.  தீர்க்கதரிசயாக இருக்கும்படி அவர் எரேமியாவை அழைத்தபோது, ‘எரேமியாவே, பயப்படாதே, நான் உன்னோடுகூட இருப்பேன்’ (எரேமியா 1:8,19) என்று கூறினார். வாலிபனான யோசேப்போடும் தேவன் இருந்தார். அவன் செய்த காரியமெல்லாம் வாய்த்தது (ஆதியாகமம் 39:3). ஆம், ஆண்டவர் இருக்கிற இடத்தில் செழிப்பும் பரிபூரணமும் உண்டு. கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும் (நீதிமொழிகள் 10:22).
 
ஓபேத் ஏதோம் தேவன் மேல் மிகுந்த பக்தியுள்ளவனாக நடந்துவந்தான். தன்னுடைய வீட்டில் உடன்படிக்கை பெட்டிக்காக ஆசரிப்பு கூடாரம் ஒன்றை அவன் வைத்திருந்தான். ஆகவே, தேவன் அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் (2 சாமுவேல் 6:11). அதைப்போலவே லட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி வனாந்தரத்திரத்தில் நடந்தபோது, தேவன் அவர்களை போஷித்தார் (உபாகமம் 32:14). 
 
ஆம், தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் பதித்துக்கொள்ளுங்கள். அவரை தேடுவதில் உத்தமமாயிருங்கள். அப்பொழுது அவர் உங்களோடுகூடவே இருப்பார். தேவனுடைய காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்கள் குடும்பத்தினரும், இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதில் உண்மையுள்ளவர்காய் இருக்கிறார்களா? என்பதை ஆராய்ந்து, சரியான வழியிலே நடத்துங்கள். தேவனுடைய வார்த்தைகளை பின்பற்றுவதில் ஜாக்கிரதையாயிருங்கள். அப்பொழுது ஆண்டவர் உங்களோடுகூட இருப்பார். மேற்கண்ட தேவதாசர்கள் செய்தபடியே எல்லாவற்றிலும் ஆண்டவரை முதன்மையாக எண்ணி காரியங்களை செய்திடுங்கள். தேவன் நம்மோடிருக்கும்போது நமக்கு எவ்வித குறைவும் இருப்பதில்லை.  அவர் உங்களை உச்சிதமான கோதுமையினாலும், கன்மலையின் தேனினாலும் திருப்தியாக்குவார் (சங்கீதம் 81:16).
Prayer:
பரமதகப்பனே,
இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். காலைதோறும் உமது கிருபைகளும் ஆசீர்வாதங்கள் புதியதாயிருப்பதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். உம்மை தேடாமல் உமக்கு முதலிடம் கொடுக்காமல், சுயத்தையும் உலக காரியங்களையும் நம்பி அதன்பின்னே போனதற்காய் வருந்துகிறேன். என்னை மன்னித்தருளும். என்னை புதிய மனிதனாய்/மனுஷியாய் மாற்றியருளும், நீர் எப்பொழுதும் என்னோடும் என் வீட்டாரோடும் தங்கியிரும். நீர் எங்களோடு இருந்தால் ஒரு குறைவும் எங்களுக்கு வருவதில்லை என்பதை விசுவாசிக்கிறேன். உம்முடைய வார்த்தையின்படியே அடியானுடைய வீட்டை ஆசீர்வதித்து உச்சிதமான கோதுமையினாலும், கன்மலையின் தேனினாலும் திருப்தியாக்கியருளும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000