Loading...
Evangeline Paul Dhinakaran

நீதிமானின் ஜெபம் கர்த்தருக்கு பிரியம்!

Sis. Evangeline Paul Dhinakaran
15 Nov
எபிரெய மொழியில்  “Tefilah”  என்பதற்கு தமிழில் “ஜெபம்” என்று பொருள். இதற்கு விண்ணப்பம், வேண்டுகோள் என்றும் பொருள் உண்டு. இது கடவுளோடு தொடர்புகொள்கிற ஒரு காரியமாகும். ஆண்டவரோடு நாம் எந்த காரியத்தில் அதிகமாய் தொடர்பு கொள்கிறோம்?  வேதத்தில், யாக்கோபு என்னும் புத்தகத்தில் இதற்கான பதிலை நாம் வாசிக்கிறோம். “உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்ப்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்” (யாக்கோபு 5:13-15). விசுவாச ஜெபம் விடுதலையை கொண்டுவரும், பிணியாளியை இரட்சிக்கும். இது நம்முடைய பரலோக பிதாவினால் நமக்கு கொடுக்கப்பட்ட கட்டளையாயிருக்கிறது.

1 இராஜாக்கள் 13ம் அதிகாரத்தை நாம் வாசிப்போமானால், அதில் “யெரோபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான். இந்த வார்த்தையை ராஜாவாகிய யேரோபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று. அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ண வேண்டும் என்றான். அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமூகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது (1 இராஜாக்கள் 13:1-6).
கர்த்தரிடத்தில் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்கு நிச்சயமாக பதில் வரும். ஏனெனில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களோடுகூடவே இருக்கிறது. நீதிமானுடைய ஜெபத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். நீங்கள் நீதிமானாயிருக்க விரும்பினால் தேவனுடைய வார்த்தையை பின்பற்றுங்கள். தேவன்மீது உறுதியான விசுவாசம் வைத்து, அவருடைய வாக்குத்தத்தங்களை நம்புவதே நம்மை நீதிமானாக்கும். ஆபிரகாமுடைய விசுவாசத்தை தேவன் நீதியாக எண்ணினார் (ரோமர் 4:22). ஆகவே, நீங்கள் சோதனை வேளையிலும், கஷ்ட நேரத்திலும் கர்த்தருக்குள் உறுதியாக நிலைத்திருங்கள். அவருக்கு பிரியமாய் வாழுங்கள். அப்பொழுது நீங்கள் செய்கிற ஜெபங்கள் சர்வ வல்லமையுள்ளவருக்கு சுகந்த வாசனையாயிருக்கும். உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடக்கும். 
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே, 

என் வாழ்வில் ஒவ்வொருநாளும் உம்முடைய வார்த்தையின்படி நடக்கும் கிருபையை நாடுகிறேன். துன்ப நேரத்திலும் உம்மில் பெலன்கொள்ள இரக்கம் பாராட்டும். பிரச்சினைகளிலிருந்து நீர் என்னை விடுவித்து பாதுகாப்பீர் என்று உம்மையே உறுதியாய் நம்புகிறேன். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000