Loading...

பூரண அன்பு!

Sharon Dhinakaran
08 Nov
கர்த்தர் நமக்கு அற்புதமான குடும்பத்தையும் நண்பர்களையும் ஆசீர்வதித்து கொடுத்திருக்கிறார்.  நாம் அவர்களை நேசிக்கிறோம். ஆனால் அது  பூரண அன்பாயிருக்கிறதா? நம்மீது காட்டப்படும் அன்பில், சில நேரங்களில் எவ்வித காரணமுமின்றி ஒருவித பயம் நம்மை தொற்றிக்கொள்கிறது. ஆனால், தேவனுடைய வார்த்தை சொல்கிறது, “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:18).தேவனுடைய அன்பைத் தவிர வேறொருவருடைய அன்பும் பூரணமானது அல்ல. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவன் நமக்காக தம் ஜீவனையே கொடுத்திருக்கிறார்.  அன்பு இருக்குமிடத்தில் பயமில்லை. ஏனெனில், தேவனுடைய பரிபூரண அன்பு பயத்தை நம்மிலிருந்து நீக்குகிறது. “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோத்தேயு 1:7). 

ஒரு பேஸ்பால் சாம்பியன் இருந்தார். அவர் பேஸ்பால் விளையாட்டுக்குச் செல்லவிருந்தபோது அவருக்கு திடீரென்று ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் யாரோ ஒருவர், “நீங்கள் போட்டிக்குச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவீர்” என மிரட்டினார். அவர் தொலைபேசியை வைத்த பிறகு, மிகவும் கலக்கமடைந்தார். அவருக்குள்ளே பயம் நுழைந்தது. அவர் பெவிலியனிலிருந்து வெளியே வந்து சந்தேகத்திற்குரிய நபர் யாராவது இருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால், அவர் தகப்பனார் அவரை உற்சாகப்படுத்தி  “மகனே நீ கவலைப்படாமல் சென்று விளையாடு. நான் உனக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறேன்” என்றார். அந்த வார்த்தைகள் இந்த இளம் வீரரை ஊக்கப்படுத்தியது. மேலும் அவரது தகப்பனார் எதுவும் தவறாக நடக்க விடமாட்டாரென்று அவர் நம்பினார். மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி வெற்றிபெற்று தனது குழுவிற்கும், குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்தார். 
நாமும் இன்று அநேக காரியங்களைக் குறித்து பயப்படுகிறோம். உயிர் பயம், மரண பயம், எதிர்காலத்தைக் குறித்த பயம், நாம் நேசிப்பவர்களை இழந்துவிடுவோமோ என்ற பயம், தேர்வு பயம் என்று நம் பயத்திற்கு முடிவில்லாமல் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறது. உங்கள் அச்சத்தை போக்க ஆண்டவராகிய இயேசுவையே நோக்கிப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியிலும் சத்தியத்திலும்  நடப்பதன் மூலம் மட்டுமே, சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களோடு இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். “நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை” (உபாகமம் 31:6) என்ற வேதவார்த்தையின்படியே தைரியமாயிருங்கள். இளம் பேஸ்பால் சாம்பியன், தனது தந்தை தன்னைப் பாதுகாப்பார் என்று நம்பியதுபோல, உங்களைத் தொந்தரவு செய்யும் எதற்கும் நீங்கள் பயப்படாமல், கர்த்தர்மீது நம்பிக்கையாயிருங்கள். வாழ்க்கை எனும் விளையாட்டை மிகவும் கவனமாக விளையாடுவதற்கு உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். தேவன் உங்களோடிருந்து, உங்களுக்கு வெற்றியை அருளும்படி பிரார்த்தனை செய்யுங்கள். அப்பொழுது கர்த்தர் தமது வழிகளை உங்களுக்கு வெளிப்படுத்தி, தமது சித்தப்படி உங்களை வழிநடத்துவார். இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமான நாளாயிருப்பதாக!
Prayer:
பரலோகத் தகப்பனே,

உம்முடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாய் கல்வாரி சிலுவையில் உமது ஜீவனையே எனக்காக கொடுத்தவரே உமக்கு நன்றி. உமது அன்பை ஒருநாளும் மறவாமலும், உம்மைவிட்டு விலகாமலும் இருக்கின்ற இருதயத்தை எனக்கு தாரும். நதிபோல பிரவாகித்து ஓடுகிற உமதன்பு எனக்குள்ளிருந்த பயத்தையும் கலக்கத்தையும் விரட்டியடித்துவிட்டது. ஆண்டவரே, நீரே என் தகப்பனாயிருந்து எனது ஒவ்வொரு அடிகளையும் பாதுகாக்கின்றீர். உமது பரிபூரண அன்பில் என்னை நிலைத்திருக்க செய்ததற்காக உமக்கு நன்றி. உம்மைத் தவிர வேறொருவரும் என்மீது பூரண அன்பை செலுத்தமுடியாது. உமது அன்பை மற்றவர்களோடு நான் பகிர்ந்துகொண்டு, தேவ ராஜ்ஜியத்தை இந்த பூமியில் கட்டி எழுப்புவதற்கு எனக்கு உதவும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.  

For Prayer Help (24x7) - 044 45 999 000