Loading...
Dr. Paul Dhinakaran

தேவ சமாதானம்!

Dr. Paul Dhinakaran
12 Feb
சமாதானத்தை பெறுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல், பலர் இங்கேயும் அங்கேயுமாக தீர்வைத்தேடி அலைகிறார்கள். பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசுவிடம் வாருங்கள். தேவன் தருகிற சமாதானம் எல்லா வகையான நோய்களுக்கும் மருந்தாகும். ஒரு படைப்பாளருக்குத்தான் தன் படைப்பை மீண்டும் அதனுடைய அசல் நிலைக்கு கொண்டுவருவதைப் பற்றி நன்கு தெரியும். ஆம் நம்மை படைத்த தேவாதிதேவன் நம்முடைய மனநிலையை அறிந்திருக்கிறார்.  ஆகவேதான், “நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்” (எரேமியா 30:17) என்று கூறுகிறார். மன அழுத்த நோயால் சமாதானமின்றி தவித்து வந்த சகோதரர் ஜெய்சன் பால் அவர்கள் குணமடைந்ததை  என்பதை சாட்சியாக எழுதியிருக்கிறார். சமாதானமில்லாமல் நீங்கள் தவிக்கிறவர்களாயிருந்தால் இந்த சாட்சியை வாசித்து பயன்பெறுங்கள். 

“ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு மேலாக ஹிஸ்டீரியா என்ற மனநோயால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். இதனால் என்னால் தனியாக வெளியே செல்லவோ, சரியாக படிக்கவோ முடியாது. எப்போதும் இந்த நோயின் தாக்கம் என்னை அதிக கஷ்டத்துக்குள்ளாக்கியது. எனது குடும்ப உறுப்பினர்கள் என்னைக்குறித்து அதிகமாய் கவலைப்பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், நான் 2003ம் ஆண்டு மதுரையில் (தமிழ்நாடு, இந்தியா) நடந்த இயேசு அழைக்கிறார் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அன்றிரவு னுச. பால் தினகரன் அவர்கள் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின், ஹிஸ்டீரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் விடுபட பிரார்த்தனை ஏறெடுத்தார். நானும் அவருடன் இணைந்து ஜெபிக்கும்போது, என் உடலில் தேவனுடைய தொடுதலை உணர்ந்தேன். அந்நேரமே நான் கீழே விழுந்துவிட்டேன்.  அப்பொழுதே விடுதலை பெற்றேன். இப்போது என்னால் இயல்பாகவும், தெளிவான மனநிலையுடனும் எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!”
கர்த்தர் நல்லவர்! இப்போதும் இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, இயேசு உங்களையும் தமது சமாதானத்தினால் நிரப்புவார். அவருடைய மகிமை உங்கள் மனதையும் சரீரத்தையும் அவருடைய ஆலயமாக நிரப்பும். தேவனுக்கு முன்பாக மலை போன்ற பிரச்சினைகள் அனைத்தும் உருகிப்போகும். உங்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ சிகிச்சை தேவைப்பட்டால், “இயேசு” என்ற அற்புதமான பெயரை நீங்கள் அழைக்கும்போது, தேவசமாதானம் உங்களை முழுமையாக நிரப்பும். தேவனிடத்திலிருந்து கிடைக்கின்ற சமாதானம், உங்கள் கலங்கிய இருதயத்திற்கு மருந்தாகும். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; ....உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று இயேசு வாக்களித்திருக்கிறார். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபிரெயர் 4:12). தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் உறுதியாய் நம்புங்கள். அப்போது தேவ சமாதானத்தினால் உங்கள் வாழ்வில் காணப்படுகிற எல்லாவிதமான யுத்தங்களையும் நீங்கள் வெல்ல முடியும். உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தையினால் நிரப்புங்கள். அப்பொழுது ஒவ்வொரு நுகமும் அடிமைத்தனமும் உடைவதை நீங்கள் காண்பீர்கள். இப்போதும்கூட நீங்கள் இழந்த சமாதானத்தை பெற்றுக்கொள்ளும்படி இயேசுவின் காயப்பட்ட கரங்கள் உங்கள் மீதுள்ளது. “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோத்தேயு 1:7). இந்த வேத வசனத்தை உங்களுக்காக எடுத்துக் கொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Prayer:
அன்புள்ள பிதாவே,

என் பாவம், சாபம், நோய், அவமானம் ஆகியவற்றை நீக்கும்படி உமது ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினீர் உமக்கு நன்றி. இன்றைக்கும் கலங்கிய இதயத்துடன் உமக்கு முன்பாக நிற்கிறேன். நான் அனுபவிக்கிற இந்த நுகத்தினால் எனது மனமும், உடலும் நசுக்கப்படுகிறது. ஆண்டவரே, உமது சமாதானத்தால் என்னை நிரப்பும். சந்தோஷத்தையும் மனநிம்மதியையும் எனக்கு தந்து ஆசீர்வதியும். என் விசுவாசத்தை பெலப்படுத்தும். எனது சூழ்நிலை மாறும்படி என் வாழ்வில் ஒரு அற்புதம் செய்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000