Loading...
Evangeline Paul Dhinakaran

தாயின் உள்ளம் கொண்ட தேவன்

Sis. Evangeline Paul Dhinakaran
01 Oct
அன்பு சகோதரரே / சகோதரியே, "நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை" (ஏசாயா 54:14) என்ற வாக்குத்தத்தத்தின்படி இன்று ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கிறார். இது எவ்வளவு நிச்சயத்தைத் தரக்கூடிய வாக்குத்தத்தமாயிருக்கிறது!

தேவன் உங்களை எவ்வாறு நீதியில் ஸ்திரப்படுத்துவார்? நம் தேவன், தாயைப்போன்ற இருதயம் கொண்டவர். நம்முடைய அம்மா, நம்மை காலையில் எழுப்பி, வேதத்தை வாசிக்கச் செய்து நம்முடைய குணநலனிலும், வாழ்க்கை நலனிலும் கரிசனை காட்டுவதை கண்டிருப்போம். ஆண்டவரும் அப்படியே நம்முடைய குணநலனிலும், வாழ்க்கை நலனிலும் கரிசனையாயிருக்கிறார். "இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்" (ஏசாயா 50:4) என்று வேதம் கூறுகிறது. இதுவே தேவனுடைய தாய்போன்ற இருதயமாகும். இதுபோன்றே ஆண்டவர் உங்களை நீதியில் ஸ்திரப்படுத்துகிறார். ஆகவே, அவரோடு உணர்வுப்பூர்வமாக இணைந்திருங்கள். எப்போதும் அவருக்குச் செவிகொடுத்து, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.
நீங்கள் இப்படியாய் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் உங்களை புது பாஷையால் நிரப்புவார். "அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்" (செப்பனியா 3:9) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆம், அன்பு சகோதரரே / சகோதரியே, கர்த்தரே உங்கள் உதடுகளைச் சுத்திகரிப்பார். தாயின் கரிசனையோடு உங்கள்பேரில் அக்கறையாக இருக்கிறவரும், உங்கள்மேல் உடன்படிக்கையின் அன்பை பாராட்டுகிறவரும், ஒருபோதும் மாறாதவருமாயிருக்கிற, தேவனை நீங்கள் பற்றிக்கொள்ளும்போது அவர் நீதிக்குள்ளாக உங்களை வழிநடத்துவார். இன்றைக்கு ஆண்டவர், தமது நீதியினால் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் தமக்கு முன்பாக பரிசுத்தமான வாழ்க்கை நடத்தும்படி இயேசு ஏற்கனவே தமது நீதியை கொடுத்துள்ளார் என்பதே நற்செய்தியாகும். நீங்கள் அவரது நீதியைப் பெற்றுக்கொள்ளும்படியாக, பாவமறியாத அவர் தம்மையே கொடுத்திருக்கிறார். நீங்கள் தேவனுடைய நீதியை கொண்டிருக்கும்போது, பயப்படமாட்டீர்கள். கொடுமையை காணமாட்டீர்கள். கீழாக தள்ளப்படமாட்டீர்கள். மாறாக, எல்லா ஜனங்களுக்கு மேலாகவும் உங்கள் தலை உயர்த்தப்பட்டிருக்கும். இவ்வாறாக ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துவார். ஆகவே, சந்தோஷப்பட்டு களிகூருங்கள்.
Prayer:
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசுகிறதற்காக உமக்கு நன்றி. உம்முடைய நீதியை சிலுவைமீதில் எனக்கு தந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையை உம்முடைய கரங்களில் சமர்ப்பிக்கிறேன். நான் உள்ளான மாற்றமடைந்து, உமக்கு முன்பாக பரிசுத்தமாக ஜீவிக்க எனக்கு உதவும். ஆண்டவரே, நீர் வாக்குப்பண்ணியுள்ளபடியே என்னை உம்முடைய நீதியில் ஸ்திரப்படுத்தியருளும். என் உதடுகளை சுத்திகரித்து, புது பாஷையினால் என்னை நிரப்பும். அனுதினமும் என் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை அனுபவிக்க உதவும். நான் உம்மோடு நெருங்கி உலவும்படி கிருபை செய்யும். ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000