Loading...
Stella dhinakaran

கர்த்தரை பற்றிக்கொள்ளுங்கள்!

Sis. Stella Dhinakaran
11 Feb
ஒரு மனிதன் பாவம், அடிமைத்தனம் போன்ற கோபாக்கினையின் வாழ்விலிருந்து, தேவனுடைய கிருபையினால் சுத்திகரிக்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவின் மூலம் இரட்சிப்பைப் பெறும்பொழுது, அவன் மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும், தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனிதன் ஆகிறான் (எபேசியர் 4:24). வாலிபர்களாயிருந்த தானியேலும், அவனுடைய நண்பர்களும் இஸ்ரவேலராயிருந்தும், பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டபொழுதும், கர்த்தருக்குள் உறுதியாக இருந்து, வேறு தெய்வங்களைப் பணியாமல், விசுவாச வீரர்களாக எவ்வளவாய் சாட்சிகளாக விளங்கினார்கள். அதினால் எவ்வளவாய் அவர்கள் மேன்மை பெற்று உயர்த்தப்பட்டார்கள் பாருங்கள்!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன், தன் பெற்றோருக்கு ஒரே மகன். அவன் தகப்பனார் தனது மிகவும் குறைவான சம்பாத்தியத்தில் அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். ஆனால், அவனோ நண்பர்களோடு சேர்ந்து, கல்லூரிக்கு செல்லாமல், சினிமா பார்ப்பதிலும் மற்றும் கேளிக்கைகளிலும் மனதை செலுத்தி கல்வியில் தோல்வியின்மேல் தோல்வி அடைந்தான். இந்த நிலையில் கர்த்தர் தமது தெய்வீக அன்பினால் அவன் வாழ்வை மறுரூபப்படுத்தினார். அவன் புது வாழ்வைப் பெற்றான். பெற்றோரின் அன்பை உணர்ந்தான். அதன்பிறகு கஷ்டப்பட்டு படித்து, தேவ ஒத்தாசையுடன் வெற்றிபெற்று, பட்டத்தையும் பெற்றான். ஆண்டவருடைய அன்பை தன்னைப்போன்று அறியாமலிருக்கிறவர்களுக்கு அறிவிப்பதிலே உறுதியாக நின்று, அநேகருக்கு முன்பாக நட்சத்திரமாக விளங்கினான். இவனுடைய இந்த உறுதியையும், வைராக்கியத்தையும் கண்ட கர்த்தர், இவனுக்கு ஒரு நல்ல வேலையையும், வாழ்க்கைத் துணையையும் கொடுத்து, மென்மேலும் அவனை சகலவிதத்திலும் உயர்த்தினார். 
ஆம் எனக்கன்பானவர்களே, குறிப்பாக இளைஞர்கள்,  இந்த உலகத்தின் வழிகளை பின்பற்றாதீர்கள். கர்த்தர் உங்களை விடுவித்து உங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்க விரும்புகிறார். “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே” (சங்கீதம் 24:3,4).  ஆகையினால் மாசற்றவர்களாய் தேவனுடைய நீதியான வழிகளில் நடந்து அவருடைய அளவில்லாத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். “சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்” (யோபு 17:9)  என்று  வேதம்கூறுகிறபடி,  தேவனுடைய ஆசீர்வாதங்களால் நீங்கள் பலத்துப்போவீர்கள். அவர் உங்களை நிச்சயமாக உன்னதத்திற்கு உயர்த்துவார். 
Prayer:
கர்த்தாவே!

நீதியின் வழிகளில் நான் உறுதியாக நடக்க உதவும், தூய்மையான இருதயத்துடன் உம்முடைய தெய்வீக வழிகளை பின்பற்ற எனக்கு அருள்செய்தருளும்.  உமக்கும், என் குடும்பத்தினருக்கும் உபயோகமில்லாமல் வாழ்ந்த நாட்கள் போதும். உமது நாம மகிமைக்காக எழும்பி பிரகாசிக்க உதவும். உமது அளவில்லாத ஆசீர்வாதங்களை பெற என்னை தகுதிப்படுத்தியருளும்.  

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000