Loading...
Stella dhinakaran

போதித்து நடத்துகிற தேவன்!

Sis. Stella Dhinakaran
21 Jul
போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்றாட  வாழ்க்கையில் நாம் நல்லவிதமாய் நீதியின் பாதையில் நடந்தாலும், நமக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். அநியாயமாய் நம் மீது குற்றம் சுமத்துகிறவர்கள், பொறாமையினிமித்தம் சஞ்சலப்படுத்த விரும்புகிறவர்கள் என பற்பல விதங்களிலே நாம் இன்னல்களை அனுபவித்து வருகிறோம். ஆனால் வேதவசனமோ, “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31) என்று கூறுகிறது. ஆம், நிச்சயமாகவே கர்த்தர் நம்மோடுகூட இருந்தால், ஒருவரும் நம்மை எதிர்த்து நிற்க முடியாது. 

ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் ஒருவரை பலரும் வீணாகக் குற்றஞ்சாட்டி, அவருடைய மனதை புண்படுத்த திட்டமிட்டனர். நிறுவனத்தின் முக்கிய அங்கத்தினர்கள், ஒரு குறிப்பிட்ட நாளை நிர்ணயித்து, நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளைக் கொண்டு அவரை விசாரிக்க தீர்மானித்தனர்.  இந்த தகவல் அந்த பங்குதாரரை சென்றடைந்தது. அவர் குறிக்கப்பட்ட அந்த நாளுக்கு முந்தின இரவு முழுவதும், மறுநாள் காலையிலும் தேவசமூகத்தில் அமர்ந்து, தான் பேசவேண்டிய காரியங்களை போதிக்கும்படியாய் பிரார்த்தனை செய்தார். தேவ ஆலோசனையையும் அவருடைய வசனத்தையும் தன் பெலனாகப் பெற்றுக்கொண்டு, விசாரணைக்கு கடந்து சென்றார். ஆவியானவர் அவரை போதித்து நடத்தினபடியால், அவரை எதிர்த்தவர்கள் அவருக்கு விரோதமாய் பேசமுடியாமல், குற்றம் கண்டுபிடிக்க இயலாமல் திண்டாடிப் போகும்படி தேவன் கிருபை செய்தார். ஒரு முடிவும் எடுக்க முடியாமல் அப்படியே வெட்கத்தோடு அந்த இடத்தை விட்டு அகன்று போகும்படி ஆண்டவர் அருள்புரிந்தார். ஆம்!  “நான் உன் வாயோடே இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன்” (யாத்திராகமம் 4:12) என்ற வார்த்தையின்படியே அந்த தேவ மனிதரை தேவன் வழிநடத்தினார். 
எனக்கு அன்பான சகோதரனே, சகோதரியே, நம்முடைய ஞானம், விவேகம், புகழ்ச்சி, அறிவு, புத்திக்கூர்மை இவைகள் மூலமாய் எதையும் சாதிக்க முடியாது.  கர்த்தர்  நம்முடனே இல்லாவிட்டால் இவை யாவும் வீண். அவருடைய நல்லாலோசனையே நம்மை நல்வழியில் நடத்தும். பற்பல சூழ்நிலையின் மத்தியிலும் கர்த்தர் உங்களுடனேகூட இருந்து, நீங்கள் செய்ய வேண்டிய, பேச வேண்டிய காரியங்களை உங்களுக்கு போதித்து நடத்துவார். போதித்து நடத்துகிற தேவனையே நோக்கி பாருங்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் தப்பிச்செல்ல வழியே இல்லையென்று நாம் நினைக்கலாம். ஆனால், தேவனை நாம் சார்ந்துகொண்டால், அவர் நமக்கு புதிய ஆலோசனைகளை தந்து நம்முடைய வாழ்வில் அற்புதங்களை செய்து நம்மை ஆச்சரியப்படுத்துவார். 
Prayer:
என் அன்பின் பரம பிதாவே!

நீரே என்னை போதித்து நடத்துகிறவர். உம்முடைய துணையில்லாமல், எத்தனை முறை தோல்வியைக் கண்டிருக்கிறேன். இனி ஒருநாளும் அப்படியிராதபடி உம்முடைய பிரசன்னம், பரிசுத்த ஆவியின் நிறைவு என்னை நிரப்ப உதவி செய்யும்.  ஒருவரும் எதிர்த்து நிற்க முடியாதபடி என் வாழ்வில் நீரே எனக்கு முன்னும் பின்னுமாக இருந்து காத்தருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்!

1800 425 7755 / 044-33 999 000