Loading...
Evangeline Paul Dhinakaran

கர்த்தர் உங்களை காண்கிறவர்!

Sis. Evangeline Paul Dhinakaran
10 Feb
வேதத்தில், “நீர் என்னை காண்கின்ற தேவன்” என்று ஆகார், பாலைவனத்தில் ஒரு நீரூற்றுக்கு அருகில் தன்னுடன் பேசிய இறைவனை இவ்வாறு பெயர்ச் சொல்லி அழைக்கிறாள். அவள் எஜமானியாகிய சாராயை விட்டு அவள் ஓடிவந்து வனாந்தரத்தில் ஆதரவற்ற நிலையில் கண்ணீர் வடிக்கும்போது, தன்னுடனே பேசிய தேவனுக்கு “அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு என்னை காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்” (ஆதியாகமம் 16:13). ஆம் பிரியமானவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும் ஆண்டவர் உங்களை பார்க்கிறார். உங்கள் கண்ணீர், வேதனை மற்றும் தேவைகள் அவருடைய கண்களுக்கு மறைவாயிருக்கவில்லை. உங்கள் கண்ணீரை அவர் தனது துருத்தியில் வைத்திருக்கிறார். அவர் உங்களை ஆறுதல்படுத்தி, ஒரு பெரிய தேசமாக உயர்த்துவார். 

ஒருநாள், ஒரு ஸ்கூபா மூழ்காளர் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றார். கடலின் ஆழத்தில் ஒரு காகிதத்துண்டு சிக்கியிருப்பதைக் கவனித்தார். அவர் அந்த காகிதத்தை கையில் எடுத்துப்பார்த்தபோது, அதில் “என் தேவன் என்னை காண்கிறார்” என்று எழுதப்பட்டிருந்தது. ஸ்கூபா மூழ்காளர் பலமுறை சுவிசேஷத்தை மறுத்த ஒரு நபர். ஆனால், அவருடைய தெய்வபக்தியுள்ள தாய் மற்றும் தெய்வீக மனிதர்கள் அவருடைய இரட்சிப்புக்காக ஜெபித்துக்கொண்டிருந்தனர். ஆகவே தான், இம்முறை கடலின் ஆழத்தில் தேவனுடைய வார்த்தை அவரோடு இடைபட்டது. அந்த வார்த்தை அவருக்குள் கிரியை செய்தது. அவர் தனது வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார். “இம்முறை தேவனுடைய வார்த்தையை என்னால் எதிர்க்க முடியவில்லை. கர்த்தர் என்னை கடலின் ஆழத்தில் சந்தித்தார் என்று அவர் கூறினார்.
ஆம், தேவன் நீங்கள் எந்த நிலையில் எங்கிருந்தாலும் உங்களை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறார். சங்கீதக்காரனான தாவீதுக்கு சர்வவல்லமையுள்ள தேவனை குறித்த அனுபவம் இருந்தது. ஆகவே தான், அவர் சங்கீதம் 139:8-10 வரையுள்ள சங்கீதத்தை பாடினார். “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும்.” உங்கள் பிரார்த்தனைக்கு நிச்சயமாக தேவன் பதிலளிப்பார். “கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல், மேலாவாய்” (உபாகமம் 28:14) என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். “இதோ நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்! இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19) என்று சர்வவல்லமையுள்ள தேவன் கூறியிருக்கிறார். ஆகவே அவர் உங்கள் கண்ணீரை துடைத்து, உங்களுக்கு அற்புதம் செய்வார். 
Prayer:
அன்பின் தேவனே,

என் கண்ணீர் யாவையும் நீர் காண்கிறவர். என் வேதனையை நீக்கியருளும். நான் உதவியற்ற நிலையிலிருக்கிறேன். ஆகாரை ஆசீர்வதித்ததுபோல, நீர் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும். என்னுடைய எல்லாவற்றையும் உமது இரத்தத்தின் கீழ் மூடும். உமது அதிசயம் என் வாழ்க்கையில் வெளிப்படட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000