Loading...
Samuel Paul Dhinakaran

கர்த்தர் வழியை உண்டாக்குவார்!

Samuel Dhinakaran
14 Apr
திக்கற்ற நிலைமையிலும் தேவன் நமக்காக ஒரு வழியை உண்டாக்க வல்லவராயிருக்கிறார்.  நம்முடைய அன்றாட  தேவைகளான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் போன்ற அத்தியாவசியமான தேவைகளைஅவர் அற்புதமாய் சந்திக்கிறவராயிருக்கிறார்.  நம்முடைய ஆத்துமா அமைதியற்ற நிலையில் இருக்கும்போது, அவர் அமர்ந்த தண்ணீரண்டையிலே நம்மை நடத்திச் செல்கிறார். தேவன் நம்மீது உன்னதமான அன்பை வைத்திருக்கிறார். அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நாம் ஒருநாளும் அறிய முடியாது.  சவாலான சூழ்நிலைகளின் மத்தியில் கடந்து செல்கிறீர்களா? வறண்டதும் விடாய்த்ததுமான வாழ்க்கையை அவர் நிச்சயமாக நீரூற்றாய் மாற்றுவார். 

ஆபிரகாம் சாராளை அனுப்பிவிடும்போது, அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளிமேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து அவனை உன் கையினாலே பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். வனாந்தரத்தில் வழியை திறந்த தேவன், உங்கள் பிரச்சினைகளின் மத்தியிலும் உங்களுக்கு வழியை திறப்பார். “அவர் உங்களை காண்கிற தேவனாயிருக்கிறபடியால்” (ஆதியாகமம் 16:13) அவர் நம்முடைய தேவைகளை சந்திப்பார். 
 
தேவ மனிதர் ஒருவர் ஒரு அனாதை ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் குழந்தைகளுக்கு கொடுக்க உணவும் தண்ணீரும் இல்லை என்று வேலையாட்கள் ஓடிவந்து தேவ மனிதரிடம் கூறினர். அவர்களிடத்தில் உணவு வாங்குவதற்கு பணமும் இல்லை. உடனே அவர் கண்காணிப்பாளரை அழைத்து குழந்தைகள் அனைவரையும் சாப்பிடுவதற்காக மேஜையில் வரிசையாக அமர வைக்கச்சொன்னார். பிரார்த்தனை செய்தார். பரிமாற உணவு இல்லாதபோது, இவர் ஏன் பிள்ளைகளை மேஜையில் அமர வைக்கும்படி கூறுகிறார் என்று கண்காணிப்பாளருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தேவ மனிதர் சென்று கதவை திறந்தார். எதிரில் ஒருவர் உணவுடன் நின்றிருந்தார். தேவமனிதருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. எப்படி இந்த உணவு வந்தது என கேட்டார்? நாங்கள் ஒரு திருமணத்திற்காக உணவு கொண்டு சென்று கொண்டிருந்தோம். திடீரென்று டிரக் செயலிழந்து நின்று விட்டது. இதை சரிப்படுத்த 5 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆகவே, இந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என கொண்டு வந்தோம் என்று வந்தவர் பதில் கூறினார். உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினையிலிருக்கிறீர்களா? ஆண்டவரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் நிச்சயமாக வழியை திறப்பார்.  

அவர் நம்மீது தமது கண்களை வைத்து நம்முடைய விண்ணப்பத்தை கேட்கிற தேவன். தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளுங்கள். பாவ வழிகளை விட்டு தேவனிடத்தில் உங்களை அர்ப்பணியுங்கள். அவர் தேவ திட்டத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுவார். யோகோவாயீரே, உங்கள் தேவைகள் அனைத்தும் கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் (ஆதியாகமம் 22:14).
Prayer:
அன்பின் தேவனே,

நெருக்கமான சூழ்நிலையிலும் நீர் புதிய வழியை எனக்காக ஏற்படுத்துகிற தேவன். உம்மை நன்றியோடு துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன். உம்முடைய கண்கள் எப்பொழுதும் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறபடியால், நீர் நிச்சயமாக என் தேவைகளை சந்தித்து, என்னை பூரணப்படுத்துவீர். உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை என்பதை நான் நம்புகிறேன். என் நெருக்கங்கள், பாடுகள் யாவற்றையும் உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன், இதிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கி விசாலமான பாதையில் வைத்தருளும். உம்முடைய சித்தம் என் வாழ்வில் நிறைவேறும்படி என்னை வழிநடத்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000