Loading...
Stella dhinakaran

ஜெபத்திற்கு பதில் !

Sis. Stella Dhinakaran
07 Feb
நம்முடைய தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கும் தேவன்! அவர் இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார். உங்கள் வாழ்க்கையிலுள்ள ஒவ்வொரு உயிரற்ற சூழ்நிலைகளையும் அவர் உயிர்ப்பித்து, உங்களை மகிழ்விப்பார். “நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” (மாற்கு 11:24). எனக்கு அன்பானவர்களே, உங்களுடைய விண்ணப்பம் எதுவாயிருப்பினும், அன்பின் உருவமாயிருக்கும் உங்கள் பரலோகத் தகப்பன், உங்கள் மனவிருப்பத்தை நிறைவேற்ற காத்திருக்கிறார். அவர் நமக்கு சவால் விடுகிறார், “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரேமியா 32:27). எனவே, நீங்கள் சோர்வடைய வேண்டிய அவசியமில்லை.

“இயேசு அழைக்கிறார்” நற்செய்திக் கூட்டம் ஒன்றில் ஒரு சகோதரி தன் குறைவை நிறைவாக்கிய இயேசுவுக்கு மகிமையாக சாட்சி பகிர்ந்தார்கள். அவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் செய்து பார்த்ததில், அவர்களுக்கோ, அவர்கள் கணவருக்கோ சரீரத்தில் குறைபாடு ஏதுமில்லை. எனினும், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. பின்பு தங்கள் குறை நீங்க ஜெபிக்கும்படி எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். நாங்கள் ஜெபித்து, பதில் கடிதம் எழுதினோம். தேவன் தம் மிகுந்த கிருபையினால், அந்த விண்ணப்பத்தைக் கேட்டு, அந்த சகோதரியின் கர்ப்பத்தைத் தொட்டார். 14 வருட திருமண வாழ்க்கைக்குப்பின், ஓர் அழகான பெண் குழந்தையை ஆண்டவர் அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வதித்தார். அதன்பின் அவர்கள் அந்த குழந்தையையும் கொண்டு வந்து, “உங்கள் ஜெபத்தினால் பிறந்ததுதான் இந்த குழந்தை” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு காட்டினபோது, எங்கள் உள்ளம் மிகுந்த பரவசமடைந்து, கர்த்தரை மனதார துதித்தோம். 
ஆம், நீங்களும் தேவனிடம் விசுவாசத்தோடு கேட்கலாம். கர்த்தர் ஒருவரே, நாம் நினைப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் செய்யக்கூடியவர் (எபேசியர் 3:20). உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்கும் தேவன் தமது வல்லமையை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்தத்தின்படி, “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்தேயு 21:22) என்ற வார்த்தையின்படி, நீங்கள் விசுவாசமாய் கேட்கும்போது, இந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களைக் கொண்டுவரும். இயேசு உங்களை நற்காரியங்களால் நிரப்புவார். அவர் உங்கள் குறைவுகளை நீக்கி உங்களை மகிழ்விப்பார். 
Prayer:
அன்புள்ள பிதாவே,

நான் என் தேவைகளை உம்மிடத்தில் கொண்டு வருகிறேன்.  உமக்கு முன்பாக மலைகளும் உருகும் என்று வேதம் கூறுகிறது. உமது பார்வையில் என் பிரச்சினைகள் ஒன்றுமில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். எனது தேவையை சந்திப்பதற்கு உம்மிடத்தில் கோடிக்கணக்கான அற்புதமான வழிகள் உண்டு.  உமது வார்த்தையினால் என் நிந்தையை மாற்றியருளும். என் உடைந்த உள்ளத்தை குணமாக்கியருளும். உமது அற்புதங்களின் நீரூற்றை என் வாழ்வில் திறந்தருளும். உமது மகிமை என் வாழ்வில் வெளிப்படட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000