Loading...

போஷிக்கும் தேவன்!

Samuel Dhinakaran
15 Apr
என் அன்பு நண்பர்களே, “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்” (ஏசாயா 58:11) என்று வேதம் கூறுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் முழு இருதயத்தோடு ஏற்றுக்கொள்ளும்போது,  அவர் இந்த வாக்குத்தத்தத்தின்படியே உங்களை ஆசீர்வதிப்பார். அவர் உங்கள் தேவைகள் யாவற்றையும் சந்திப்பார் . தேவனுக்கு பயந்து ஜீவிக்கிற சிலர் இவ்வுலகத்தை பார்க்கிலும் தேவனை அதிகமாய் நேசிக்கிறார்கள். இயேசுவை நேசிக்கிறவர்கள் இவ்வுலக இன்ப துன்பங்களை தேடி அதன்பின்னே ஓடமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை தேவன் ஆசீர்வதிப்பார். 

“தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” (கலாத்தியர் 6:8). நம்முடைய மாம்சம் விரும்பியபடி நாம் வாழ நினைக்கும்போது, மாம்ச விருப்பங்களுக்கு தீனிபோட்டு வளர்க்கும்போது, நாம் அழிவை நாடி ஓடுகிறோம். எடுத்துக்காட்டாக: ஒரு மனிதன் தன் கழுதையை வேகமாக ஓட்டவேண்டுமென்று விரும்பினால், அந்த கழுதைக்கு முன்பாக நீண்ட சரத்தில் கேரட்டை கட்டி தூக்கி வீசுவான். கழுதை அந்த கேரட்டை பார்த்து மகிழ்ச்சியடைந்து, அதை அடைவதற்கு முயற்சிக்கும். ஆனால், அதன் முயற்சி யாவும் வீண் என்பதையும், தான் முட்டாளாக்கப்பட்டோம் என்பதையும் தான் தோல்வியடையும்போது உணரும்.  சில நேரங்களில் நாமும்கூட இந்த கழுதையைப்போலவே இருக்கிறோம். நம்முடைய வாழ்நாள் முழுவதும் நம்மோடு வர முடியாதவர்கள் பின்னாக நாம் வேகமாக ஓடுகிறோம். ஆனால், ஒருநாள் நாம் நினைத்ததை அடையமுடியாமல் தோல்வியை சந்திக்கும்போது நாம் முட்டாளாக்கப்பட்டோம் என்பதை உணருகிறோம்.  சாத்தான் நம்முடைய கண்களுக்கு முன்பாக கேரட்டைப்போல ஏதாவதொன்றை காண்பித்து அவற்றின் பின்னால் ஓடச்செய்கிறான். பிசாசு நம்மை முட்டாளாக்கி தோல்வியடையச்செய்து நம் வாழ்க்கையை வீணாக்கவே பிரயாசப்படுகிறான். 
இன்றைக்கும் பொய்யான மாயையான காரியங்கள் பின்னாக ஓட வேண்டாமென்று இயேசு நம்மைப்பார்த்து கூறுகிறார். அவர் நம்மை வாழ்நாள் முழுவதும் வழிநடத்த விரும்புகிறார். ஆனால், பிசாசோ நம் கண்களை குருடாக்கி இவ்வுலக இச்சைகளுக்கு பின்னாக ஓடச்செய்கிறான். ஆனால், ஆண்டவரோ “நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலத்திலும் உன் ஆத்துமாவை திருப்தியாக்குவேன்”  என்று கூறுகிறார். உங்களைச் சுற்றியிருக்கும் ஜனங்கள் வறட்சியிலிருந்தாலும், கர்த்தர் உங்களை ஆசீர்வாதத்தினால் நிரப்புவார். வேதத்தில் தாவீதைக்குறித்து அவன் கர்த்தரை மிகவும் நேசித்தான் என்று வாசிக்கிறோம். தேவனுக்கேற்றபடி நடக்கவே அவன் விரும்பினான். அவன் ஒரு பெரிய இராட்சதன் முன்பாக நின்றபோது, இயேசுவின் நாமத்தில் அவனை வீழ்த்தினான். தன் மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டியை, ஒரு பெரிய சிங்கம் கொண்டு சென்றபோது, தேவ கிருபையினால் தாவீது சிங்கத்துடன் சண்டையிட்டு ஜெயித்தான். தேவனும் தாவீதை மிகவும் நேசித்தபடியினால் ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த அவனை ராஜாவாக உயர்த்தி கனப்படுத்தினார். உங்கள் வாழ்விலும் தேவன் இதையே செய்ய விரும்புகிறார். கர்த்தரை நம்புங்கள். அவர் உங்களுக்கு உதவிச்செய்து எல்லாவற்றிலும் வெற்றி சிறக்கப்பண்ணுவார். உங்களை உயர்த்தி கனப்படுத்துவார். 
Prayer:
அன்பும் இரக்கமும் நிறைந்த தகப்பனே,

இந்த நாளிலும் நீர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்திற்காக உமக்கு நன்றி. நீர் ஓருவரே என்னை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் ஆசீர்வதிக்க முடியும். என் நம்பிக்கையை உம்மீதே வைக்கிறேன். எப்போதும் உமது கண்களில் எனக்கு கிருபை கிடைக்கச்செய்தருளும்.  உமது சமூகத்தில் நான் காத்திருக்கும்படியான கீழ்ப்படிதலை எனக்கு தந்தருளும். நீர் ஒருவரே என்னை திருப்தியாக்குகிறவர் என்று எப்பொழுதும் உம்மையே நோக்கி பார்க்கிறேன். ஜீவனுள்ள தேவனே, உம்முடைய கரத்தில் என்னை தாழ்த்தி அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்ளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000