Loading...
Stella dhinakaran

ஜெபத்தைக் கேட்கிற தேவன்!

Sis. Stella Dhinakaran
15 Mar
வாழ்க்கையில், சூறாவளி போன்ற பயங்கரமான காரியங்கள், நெருக்கங்கள், இடுக்கண்கள் நேரிடும்பொழுது, நாம் கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடு அவரை நோக்கிக் கூப்பிடுவோமானால், கர்த்தர் உடனே உத்தரவு அருளி, நம்மை விடுதலை செய்து காப்பாற்றுவார். ஆனால், அவரைப் பற்றிய அறிவை நாம் வெறுத்து, அவருடைய ஆலோசனையை மதிக்காமல், அலட்சியம் பண்ணும்பொழுதோ, அவர் ஜெபத்திற்கு உத்தரவு கொடாமல், பேசாமல் மௌனமாக இருப்பார். “அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள்அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள் என்னைக் காணமாட்டார்கள். அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள்” (நீதிமொழிகள் 1:28,29) என்று வேதம் கூறுகிறது. ஆகவே,கர்த்தருக்குப் பயந்து அவரைப் பிரியப்படுத்தி, அவருடைய  வார்த்தையை கவனியுங்கள்.

கர்த்தரை தேடாமலும், ஆலயம் செல்வதை அலட்சியமாக எண்ணியும், ஆடம்பரமான வாழ்க்கையை மனம்போல வாழ்ந்து வந்தார்கள். ஒரு குடும்பத்தின் மக்கள். உலகப்பிரகாரமான கோபாக்கினையின் காரியங்கள் அவர்கள் மனதிற்கு சந்தோஷத்தை அளித்ததால், பெயரளவில் கிறிஸ்தவர்களாயிருந்து வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தில், கல்லூரி படிப்பைப் படித்து கொண்டிருந்த மகள் ஜாய்ஸ், தன்னுடைய சக மாணவியின் நற்பண்புகள், படிப்பில் சிறந்த நிலை இவைகளைப் பார்த்து, அதன் இரகசியத்தை ஒரு நாள் அவளிடம் கேட்ட பொழுது, “தான் ஒரு போதகருடைய மகள் என்றும், ஆண்டவரை அவர்கள் எவ்வாறு தேடுகிறார்கள் என்பதையும், அதினால்தான் அத்தகைய ஆசீர்வாதத்தை ஆண்டவர் கொடுத்திருக்கிறார்” என்றும் அவள் கூறினாள். அப்பொழுது, ஜாய்ஸ் ஆச்சரியமடைந்து, தானும் அந்த பெண்ணோடு சேர்ந்து கர்த்தரை தேடி, இரட்சிப்பின் சந்தோஷத்தால் நிரம்பியபொழுதுதான், உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் மேன்மையை அவள் அறிந்துகொண்டாள். தான் பெற்ற இன்பத்தை தன் குடும்பத்தாரும் பெறும்படியாக ஆண்டவரிடம் வேண்டுதல் செய்தாள்.
உண்மையாகவே கர்த்தர் அவளுடைய ஜெபத்தைக் கேட்டு அந்த குடும்பத்தை ஆசீர்வதித்தார். தமது பிள்ளைகளின் ஜெபத்திற்கு பதிலளிக்கிற தேவன். அவர் நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆகையினால் பயப்படாமல் உற்சாகமாயிருங்கள்! “பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது” (லூக்கா 1:13). ஜாய்ஸ் ஏறெடுத்த விண்ணப்பத்தை கேட்ட கர்த்தர் மனதுருகி, அவர்கள் குடும்பம் முழுவதும் ஆண்டவர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி கிருபை செய்தார். அதுபோலவே, நாமும் ஜெபிக்கும்போது, தேவசித்தம் நம்முடைய வாழ்வில் நிச்சயமாய் நிறைவேறும். “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4) என்ற வேத வசனத்தின்படி, தேவசமூகத்தில் களிகூர்ந்திருங்கள்.
Prayer:
கர்த்தாவே, 

நான் உம்மைத்தேடாமல் அலட்சியம் பண்ணி வாழ்கிற வாழ்வை என்னைவிட்டு மாற்றி, இன்றுமுதல் நான் உமக்கு பயப்படும் பயத்தோடு, உம்முடைய வழிகளையே பின்பற்றி, நெருக்கங்களினின்று விடுதலை பெற அருள்தந்து வழிநடத்தும் நல்ல தகப்பனே!
 
ஆமென். 

1800 425 7755 / 044-33 999 000